PEDro என்ற Physiotherapy Evidence Database-வை பற்றிய உங்களின் சில கேள்விகளுக்கு இந்த வலைப்பக்கம் பதிலளிக்கும்:
1. சோதனை ஆய்வுகள், திறனாய்வுகள், மற்றும் வழிகாட்டல்கள் எவ்வாறு அமைய பெற்றுள்ளது?
எவ்வகையான மருத்துவ சோதனைகள், முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் மற்றும் ஆதாரம்-சார்ந்த மருத்துவ நடைமுறை வழிகாட்டல்கள் PEDro-வில் காப்பகப்படுத்தப்படுகின்றன என்பதை வரையறுக்க குறிப்பிட்ட திட்ட அளவைகள் பயன்படுத்தபடுகிறது. நாங்கள், சோதனைகள், திறனாய்வுகள், மற்றும் வழிகாட்டல்களை பல வழிகளில் கண்டு பிடித்துள்ளோம் (மற்றும் இன்னும் தேடுகிறோம்):
- Cochrane Collaboration-னின் புனர்வாழ்வு மற்றும் அது சார்ந்த சிகிச்சைகள் துறையின் Drs. Rob de Bie மற்றும் Riekie de Vet, முன்னிருந்த அவர்களின் சீரற்ற புனர்வாழ்வு சோதனைகளின் தரவுத்தளத்தை எங்களுக்கு தாரளமாக அளித்தனர். ஏறக்குறைய 200 துணை ஆரோக்கிய பத்திரிகைகளால் தேடி கண்டுப்பிடித்த இயன் முறை மருத்துவ சோதனைகளின் விவரங்களையும் எங்களுக்கு அனுப்பி வைத்தனர். Nederlands Paramedisch Institut-டால் (Nederlands Paramedisch Institut இணையதளத்தில் இந்த பத்திரிகைகளின் பட்டியல் காணப்படுகிறது). மிக சமீபத்தில் எங்களுக்கு அவர்கள் டச்சு வழிகாட்டல்கள் பிரதிகளை அனுப்பி வைத்துள்ளனர்.
- இவை, PEDro Partnership-ன் வழிநடத்தும் குழுவால் தனிப்பட்ட தரவுத்தளங்களுடன் இணைக்கப்பட்டது.
- ஐந்து தரவுத்தளங்கள் (Medline, Embase, CINAHL, AMED மற்றும் PsycINFO) உகந்த தேடல்கள் மூலம் நாங்கள் தேடினோம். இப்போது இந்த தரவுத்தளங்களை தானியங்கி உகந்த தேடல்களை பயன்படுத்தி தேடுகிறோம்.
- Cochrane Database of Systematic Reviews மற்றும் Cochrane CENTRAL Register of Controlled Trials ஆகியவற்றின் ஒவ்வொரு புதிய வெளியீட்டையும் நாங்கள் தேடுகிறோம்.
- நடைமுறை வழிகாட்டல்களுக்கு நாங்கள் இணையத்தை தேடுகிறோம். மருத்துவ நடைமுறை வழிகாட்டல்களுக்கான தரவுத்தளங்கள் மற்றும் அங்கிருந்து, அவற்றின் இணைப்புகளை பின்பற்றி தேடுவது எங்களின் உத்தியாகும்.
- நாங்கள் முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் மீதான தகவல் குறிப்புகளை கொண்டு, PEDro தரவுத்தளத்தில் பின்தொடர்கிறோம்.
- கடைசியாக, "PEDro நண்பர்கள்" மற்றும் PEDro பயனர்கள் எங்களைத் தொடர்பு கொள்வதன் மூலம் PEDro-வில் அல்லாத சோதனைகளைக் குறித்து தெரியப்படுத்துவர்.
2. தரவுத்தளம் எவ்வளவு முந்தைய காலத்திற்கு செல்லக் கூடும்?
எவ்வளவு காலம் முன்பு வெளிவந்தது என்பதைப் பொருட்படுத்தாமல், தரவுத்தளத்தின் (மேலே பார்க்க) அடிப்படை சேர்க்கை திட்ட அளவைகளை திருப்திப்படுத்திய எந்தவொரு சோதனை, திறனாய்வு, அல்லது வழிகாட்டல் ஆகியவற்றை நாங்கள் இணைப்போம். இதனை எழுதும் நேரத்தில், தரவுத்தளத்தின் மிக பழமையான ஆவணம் (ஒரு மருத்துவ சோதனை) 1929-ல் வெளியிடப்பட்டது.
3. எத்தனை முறைக்கொரு தரம் தரவுத்தளம் புதுப்பிக்கப்படுகிறது?
PEDro இப்போது மாதம் ஒரு முறை, வழக்கமாக, மாதத்தின் முதல் திங்கள் கிழமையில் புதுப்பிக்கப்படுகிறது.
4. தரவுத்தளத்தில் இல்லாத ஒரு சோதனை, திறனாய்வு அல்லது வழிகாட்டலை நான் கண்டுபிடிக்க என்ன செய்ய வேண்டும்?
ஒரு சோதனை, திறனாய்வு அல்லது வழிகாட்டல் பற்றி தெரிந்து அது PEDro-வில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில், ஆனால் அது இல்லையென்றால், தயவு செய்து எங்களுக்கு தெரியப்படுத்தவும். முதலில், அது சேர்க்கைக்கான திட்ட அளவைகளை சந்திக்கிறதா என்பதை சரி பாருங்கள். அவ்வாறென்றால், எங்களை தயவு செய்து தொடர்பு கொள்ளவும். நீங்கள் அதிக விவரங்களை அளிக்கும் பட்சத்தில், எங்களால் அதை நிச்சயமாக கண்டுபிடிக்க முடியும். PEDro-வில் இருக்க வேண்டி நீங்கள் நினைக்கிற ஒரு ஆய்வு அறிக்கையின் ஆசிரியர் நீங்கள் எனில், ஆனால் அது இல்லையென்றால், எங்களுக்கு ஒரு மறுபதிப்பை தயவு செய்து மின்னஞ்சல் செய்யவும்.
5. சோதனை ஆய்வுகள் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது?
சோதனைகள், (திறனாய்வுகள் அல்லது வழிகாட்டல்கள் அல்ல) ஒரு சரிபார்க்கும் குறிப்பு பட்டியல் கொண்டு ("PEDro அளவுக்கோல்" என அழைக்கப்படுகிற) மதிப்பீடு செய்யப்படுகிறது. PEDro அளவுக்கோல், சோதனைகளின் இரண்டு தர அம்சங்களை, அதாவது, சோதனையின் "நம்பகத்தன்மை" (அல்லது "உள்ளான நேர்மை "), மற்றும் சோதனையை பொருள் விளக்கம் செய்துக்கொள்ள போதுமான புள்ளிவிவர தகவல்களை கொண்டுள்ளதா என்பவற்றை கருதுகிறது. ஆனால், அது, சோதனையின் "அர்த்த உடைமை" (அல்லது "பொதுபடுத்துதல் பண்பு" அல்லது "வெளிப்புற நேர்மை”) அல்லது சிகிச்சை விளைவின் அளவு ஆகியவற்றை அளவிடாது.
ஆய்வின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்கு, சீரற்ற ஒதுக்கீடு, ஒதுக்கீடு மறைப்பு, குழுக்களை ஆரம்பக்கட்டத்தில் ஒப்பிடுதல், நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களை சிகிச்சை ஒதுக்கீட்டிற்கு மறைத்தல், சிகிச்சை அளிக்கும் நோக்கம் சார்ந்த பகுப்பாய்வு, பின்தொடர்வின் நிறைவு ஆகிய பல திட்ட அளவைகளின் ஐயப்பாடற்ற உறுதிப்படுத்துதலை நாங்கள் பார்த்தோம். ஆய்வின் பொருள் விளக்கத்தை மதிப்பிடுவதற்கு, குழுக்கள்-இடையேயான புள்ளிவிவர ஒப்பீடுகள் மற்றும் இரு புள்ளி மதிப்பீடுகளின் பதிவுகள் மற்றும் மாற்றம் சார்ந்த அளவுகளை நாங்கள் பார்க்கிறோம். இவை, மொத்தம் 10 அளவீட்டு உருப்படிகளைக் கொடுக்கிறது. சோதனை ஆய்வுகள் என்ன அறிக்கையிடுகின்றனவோ, அவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஒரு சோதனை, ஒரு குறிப்பிட்ட திட்ட அளவையை சந்தித்தது என்று பதிவிடவில்லையென்றால், அந்த திட்ட அளவை சந்திக்கப்படவில்லை என்று நாங்கள் மதிப்பிடுவோம் ("அப்பாவி என்று நிரூபிக்கப்படும் வரை குற்றவாளியே").
PEDro அளவுக்கோல் உருப்படிகளில், இரண்டை தவிர அனைத்தும் Verhagen மற்றும் அவர் சகாக்களால் உருவாக்கப்பட்ட Delphi பட்டியலை அடிப்படையாக கொண்டவை. Delphi பட்டியல் என்பது ஒரு மருத்துவ சோதனை நிபுணர்கள் குழுவால், சோதனைத் தரத்தோடு தொடர்புடைபவை என்று கருதப்பட்ட சோதனை பண்புகளின் ஒரு பட்டியல் ஆகும் (விவரங்களுக்கு, Verhagen et al, J Clin Epidemiol 1998;51:1235-41-ஐ காணவும்). PEDro அளவுக்கோல், பின்தொடர் நிறைவு மற்றும் குழுக்கள்-இடையேயான புள்ளிவிவர ஒப்பீடுகள் ஆகியவற்றில் கூடுதல் உருப்படிகளைக் கொண்டுள்ளது. Delphi பட்டியலில் உள்ள ஒரு உருப்படி (தகுதிக்கான திட்ட அளவை மேலான உருப்படி) வெளிப்புற நேர்மைக்கு தொடர்புடையது, எனவே PEDro அளவுக்கோல் மதிப்பிடும் தர பரிணாமங்களை பிரதிபலிக்காது. இந்த உருப்படி, தேடுதல் முடிவுகளில் காண்பிக்கப்படும் ஆய்வு முறை மதிப்பெண்ணை கணக்கிட பயன்படுத்தப் படமாட்டாது (அதனால் தான், 11 உருப்படிகள் கொண்ட அளவுக்கோல் மொத்தம் 10 மதிப்பெண்களை தருகிறது). இருப்பினும், Delphi பட்டியலின் அனைத்து உருப்படிகளையும் PEDro அளவுக்கோலில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டி, இந்த உருப்படி தக்க வைக்கப்பட்டுள்ளது.
"PEDro மதிப்பெண்" என்பது, சரிபார்க்கும் குறிப்பு பட்டியலின் திட்ட அளவைகளின் அடிப்படையில், சோதனை அறிக்கையில் திருப்தி செய்யப்பட்டுள்ள எண்ணிக்கையைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. PEDro தரவுத்தளத்தை தேடும் போது, PEDro மதிப்பெண் "தேடல் முடிவுகள்" பக்கத்தில் மருத்துவ சோதனைகளை வகைப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகள் மற்றும் மருத்துவ நடைமுறை வழிகாட்டல்கள் தரத்திற்கான மதிப்பீடு செய்யப்பட மாட்டாது ("N/A" என்று ஒரு தர மதிப்பெண்ணை அவை பெறும், அதற்கு "பொருந்தாது" என்று அர்த்தம்). தேடல் முடிவுகளில், முதலில், வழிகாட்டல்கள், வெளியிடப்பட்ட ஆண்டு வாரியாக (மிக சமீபத்திய வழிகாட்டல்கள் முதலாவதாக) வழங்கப்படுகிறது. இவற்றை தொடர்ந்து முறைப்படுத்தப்பட்ட திறனாய்வுகளும், ஆண்டு வாரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சோதனைகளின் மதிப்பீடு, PEDro Partnership-ல் உள்ள தற்காலிக அலுவலக பணியாளர்கள் அல்லது தன்னார்வ பிசியோதெரபி மதிப்பீட்டாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து மதிப்பீட்டாளர்களும், பழக்கம் மற்றும் பின்னூட்டு கருத்து கொண்ட பயிற்சியை மேற்கொள்வர். சோதனைகளின் தரத்தை உறுதிப்படுத்த மூன்று வகையான நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முதலில், அனைத்து சோதனைகளையும் நாங்கள் இரு முறை மதிப்பிட நோக்கம் கொண்டுள்ளோம். ஒரு மூன்றாவது மதிப்பீட்டாளர், ஏதேனும் கருத்து வேறுபாடுகள், இருந்தால் அவற்றை தீர்ப்பார். ஒரு சோதனை இரண்டு முறை மதிப்பிடப்பட்டு, மற்றும் ஒரு மூன்றாவது மதிப்பீட்டாளர் மூலம் கருத்து வேறுபாடுகள் தீர்த்து வைக்கப்படும் வரை, மதிப்பீடுகளை "உறுதி செய்யப்படவில்லை" என்று நாங்கள் சொல்வோம். இவை செய்யப்பட்ட பிறகு, மதிப்பீடுகளை "உறுதி செய்யப்பட்டது" என்று நாங்கள் சொல்வோம். இரண்டாவதாக, சில தர மதிப்பீடுகளை நாங்கள் முறைசாரா வழிகளில் சரி பார்ப்போம் (அனைத்தையும் அல்ல) . இறுதியாக, சோதனை மதிப்பீடுகளின் மேலான விவாதத்திற்கு, PEDro பயனர்களுக்கான ஒரு நுட்பம் வழங்கப்பட்டுள்ளது (பார்க்க "ஒரு குறிப்பிட்ட சோதனையின் தர மதிப்பீட்டிற்கு நான் உடன்படவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்?" கீழே).
சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளின் தரத்தை மதிப்பீடு செய்யும் PEDro அளவுக்கோலின் நம்பகத்தன்மையை விளக்கும் ஒரு ஆய்வு அறிக்கை, Maher et al (2003)-ஆல் வெளியிடப்பட்டது.
சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கு PEDro அளவுக்கோலை Jadad அளவுக்கோலோடு ஒப்பிட்ட ஒரு ஆய்வு அறிக்கை, Bhogal et al (2005)-ஆல் வெளியிடப்பட்டது.
PEDro அளவுக்கோலின் செல்லுபடித் தன்மையை மதிப்பிட்ட ஒரு ஆய்வு அறிக்கை, de Morton (2009)-ஆல் வெளியிடப்பட்டது.
6. ஒரு குறிப்பிட்ட ஆய்வின் தர மதிப்பீட்டிற்கு நான் உடன் படவில்லையென்றால் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ஒரு குறிப்பிட்ட சோதனையின் தர மதிப்பீட்டிற்கு உடன்படவில்லை என்றால் எங்களை தயவு செய்து தொடர்பு கொள்ளவும். கேள்விக்குள்ளான சோதனையின் ஆசிரியர், தலைப்பு மற்றும் அதன் மூலத்தை எங்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டும், மற்றும் சோதனை தவறாக மதிப்பிடப்பட்டது என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சோதனைஅறிக்கையில் ஒரு குறிப்பிட்ட தகவல், தர மதிப்பீட்டைப் பற்றிய விவாதத்தை ஏற்படுத்துமானால், சோதனை அறிக்கையில் அத்தகவலை எங்கே காண முடியும் என்பதை எங்களுக்கு தயவு செய்து தெரியப்படுத்தவும் (பக்கம் எண், பக்கவாட்டு கட்ட வரிசை எண், பத்தி எண், வரி எண்). நாங்கள் விவாதத்திற்குரிய அனைத்து தர மதிப்பீடுகளையும் மதிப்பீடுவோம். விவாதத்திற்குரிய மதிப்பீடுகள் பற்றிய தகவல்களுக்கு நாங்கள் நன்றி கொண்டிருந்தாலும், சோதனை மதிப்பீடுகளின் விவாதத்தைக் குறித்து தனித்தனியாக எங்களால் பதில் அளிக்க முடியாது.
7. ஒரு குறிப்பிட்ட பதிவு வரிசைப்படுத்தப்பட்டிருப்பதில் ஒரு பிழையை நான் கண்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
PEDro-வில் உள்ள ஒவ்வொரு ஆவணமும், பிசியோதெரபியின் துணை-துறைகளான தலையீடு, தலைப்பு, மற்றும் பிரச்சினை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் உடல் பகுதி ஆகியவற்றை, தொடர் PEDro குறியீடுகளை பயன்படுத்தி வகைப்படுத்தப்படுகிறது. இந்த குறியீடுகள் தேடுதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட ஆவணம் வரிசைப்படுத்தபட்டிருப்பதில் பிழைகள் இருக்கலாம் (உதாரணமாக, எழுத்து பிழைகள் இருக்கலாம், மூலம் தவறானதாக இருக்கலாம், அல்லது ஆவணம் தவறாக வகைப்படுத்தப்பட்டு இருக்கலாம்). நீங்கள் ஒரு பிழையைக் கண்டுபிடித்தால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும். "விவரமான தேடல் முடிவுகள்" பக்கத்திலிருந்து, முழு பதிவையும் வெட்டி கருத்துரை பகுதியில் ஒட்டவும், மற்றும் என்ன வரிசைப்படுத்துதல் பிழை ஏற்பட்டிருக்கிறது என்பதை குறிப்பிடவும். வரிசைப்படுத்துதல் பிழைகள் பற்றிய தகவல்களுக்கு நாங்கள் நன்றி கொண்டிருந்தாலும், வரிசைப்படுத்துதல் பிழைகளை எங்களுக்கு தெரிவிக்கிற மக்களுக்கு தனித்தனியாக எங்களால் பதில் அளிக்க முடியாது.
8. நான் PEDro திட்டத்திற்கு உதவ விரும்புகிறேன். நான் ஒரு தன்னார்வ
சோதனைகள், திறனாய்வுகள், மற்றும் வழிகாட்டல்கள் ஆகியவற்றை கண்டுபிடிக்க, நகல் எடுக்க, மற்றும் தர மதிப்பிட நாங்கள் எப்பொழுதும் தன்னார்வலர்களை தேடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எதாவது ஒரு வகையில் உதவ விரும்பினால் (உதாரணமாக, உங்கள் விருப்பத் துறைகளில் உள்ள சோதனைகளை மதிப்பீடு செய்வதன் மூலம் எங்களுக்கு உதவுவது) தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும். நீங்கள் விரும்பினால், இந்த பக்கத்தின் கீழே எங்கள் செய்திமடலுக்கு சந்தாதாரர் ஆகலாம். PEDro- வில் ஏற்படும் சமீபத்திய வளர்ச்சிகளை பயனர்களுக்கு அறிவிப்பதற்கு ஏதுவாக எங்கள் செய்திமடலை நாங்கள் பயன்படுத்துகிறோம். உலகின் எங்கிருந்தும், நீங்கள் ஒரு தன்னார்வ "PEDro நண்பர்"-ஆக இருக்க முடியும். இச்சமயத்தில், இந்த PEDro நிதி உதவியையும் எதிர்பார்க்கிறது. ஒரு சாத்தியமான நிதி ஆதார மூலத்தை நீங்கள் அறிந்திருந்தால், தயவு செய்து எங்களுக்கு தெரியப் படுத்தவும் (குறிப்பு: முழுமையான பதிப்பு சுதந்திரத்தை தக்க வைக்க கூடிய நிபந்தனையில் மட்டுமே, இந்த மையம் நிதி ஆதாரங்களிலிருந்து நிதியை ஏற்றுக் கொள்ளும்).